குருபூசை – கி. ராஜநாரயணன்

1

எல்லோரும்‌ குருபூசை கொடுக்கிறார்கள்‌! நாமும்‌ அந்தமாதிரி கொடுக்கமுடியுமா என்று மலைத்தாள்‌ சிவாமி ஆச்சி. சின்னப்‌ பிள்ளையில்‌ அவளும்போய்‌ குருபூசையில்‌ சாப்பிட்டவள் தான்‌. அந்தச்‌ சாப்பாடே தனி ருசி.

திருவிழாச்‌ சமயத்தில்‌ மலைச்சாமி முருகன்‌ கோயிலைச்‌ சுற்றியும்‌ குருபூசைச்‌ சாப்பாடு சாப்பிட்டு முடியாது. ‘இப்பந்தான்‌ அங்கனெ உட்கார்ந்து சாப்பிட்டு வரேன்‌’ என்று சொன்னாலும்‌ விடமாட்டார்‌கள்‌. ‘ஒரு வாய்‌ சாப்பிட்டுப்போ, ஒருவாய்‌! என்று வற்புறுத்துவார்கள்‌. குருபூசையில்‌ முதல்ச்சலுகை பரதேசிகளுக்குத்தான்‌. இத்தனை பரதேசிகளுக்குச்‌ சாப்பாடு போடுகிறேன்‌ என்று குருபூசை கொடுப்பதற்கு முன்னால்‌ நேர்ந்துகொள்ளுகிறது.

குருபூசை சமயத்தில்‌ இந்தப்‌ பண்டாரம்‌ பரதேசிகளுக்கு ரொம்பத்‌தான்‌ கிராக்கி! சிவாமியின்‌ தாத்தா இப்படித்தான்‌ ஒரு திருவிழாவின்‌ போது குருபூசை கொடுத்தார்‌. நூத்திஎட்டு பரதேசிகளுக்குச்‌ சாப்பாடு போடுகிறதாக வேண்டுதல்‌. என்றாலும்‌ அவருடைய வசதிக்குத்‌ தக்கபடி ஒரு முன்னூறு பேருக்கு மொத்தம்‌ சாப்பாடு போடுவதற்கு ஏற்பாடு ஆதியிருந்தது. இந்தமாதிரி ஊரு உலகத்திலே இருக்கிறவர்‌ களெல்லாம்‌ முன்னூறு ஐநூறு என்று பொங்கிப்‌ பொரித்துத்‌ தட்டிக்‌ கொண்டு இருவிழாவுக்கு வந்து ஆண்டிப்பண்டாரம்‌ பரதேசி ஏழை எளியது என்று சோறுபோட்டால்‌ எவ்வளவு என்றுதான்‌ இன்று தொலைக்கிறது? பண்டாரம்‌ பரதேசிகளெல்லாம்‌ ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்‌, “வாங்க சாமி; சாமீ வாங்க” என்று அவர்களைக்‌ காலில்‌ விழுந்து கெஞ்சணும்‌. அவர்களோ உண்ட மயக்கத்தில்‌ சிவனே என்று மல்லாந்து கிடப்பார்கள்‌.


தாத்தா குருபூசை கொடுத்த அன்று நடந்ததை இப்போது நினைத்தாலும்‌ அவளுக்கு விநோதமாய்‌ இருக்கும்‌. இவளுக்கு அப்போ
பத்து ஒம்பது வயசிருக்குமா; இருக்கும்‌. வழுவழுப்பான கல்மண்டபத்‌ தூண்களைப்‌ பிடித்து ஒவ்வொரு தூணாகச சுற்றிச்‌ சுற்றி வந்து கொண்டிருந்தாள்‌. வயசான ஒரு பாட்டி, காவி உடுத்தி மல்லாந்து கிடந்த ஒரு பரதேசியின்‌ காலடியில்‌ வந்து குனிந்து “சாமி எந்திங்க, இந்த ஏளை கொடுக்கிற குருபூசைக்கு வந்து அன்னம்‌ சாப்பிடுங்க; சாமி எந்திங்க” என்று இதையே இருப்பித்‌ திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தாள்‌ ! சாமி அசையவேயில்லை. சிவாமிக்கு இது வேடிக்கை பார்க்கத்‌ தகுந்த விஷயமாகப்‌ பட்டது.

படுத்துக்‌ கிடந்த பரதேசக்குப்‌ பக்கத்துலேயும்‌ சில பரதேசிகள்‌ சாய்ந்து கொண்டும்‌ வேட்டியை நெகிழ்த்தி விட்டுக்கொண்டும்‌
உட்கார்ந்திருந்தார்கள்‌. ஒரு மொட்டைப்‌ பரதேசி ஒருத்தன்‌ – சின்ன வயசுதான்‌ – வாயைக்‌ கோணலாக வைத்துக்கொண்டு உள்ளங்கையில்‌ எதையோ வைத்து அதன்மீது சொட்டுத்‌ தண்ணீர்‌ விட்டு அமுத்தி அழுத்தி உருட்டிக்கொண்டிருந்தான்‌.

பரதேசிகள்‌ யாரும்‌ தனது வேண்டுதலுக்கு அசையாததால்‌ கிழவி அம்மாளுக்கு அமுகை வரும்போல்‌ இருந்தது. மவுனமாக கைகளைக்‌ கட்டிக்கொண்டே நின்றாள்‌. திடீரென்று அவள்‌ கண்களில்‌ திரண்ட கண்ணீர்‌ பரதேசியின்‌ கால்மாட்டிலோ காலிலோ விழுந்தது போலிருக்கு. படுத்துக்‌ கிடந்த பரதேசி எழுந்தான்‌. “எந்த எடம்‌; எந்த எடம்‌?” என்று அவளிடம்‌ கேட்டான்‌. இப்போது அந்தக்‌ கிழவி அம்மாள்‌ முகம்‌ மலர “அந்தோ… வேப்பமரம்‌ நிக்கே அங்கனெ” கைநீட்டிக்‌ காண்பித்தாள்‌. “நீங்க போங்க நா வாரேன்‌” என்றான்‌. சரி என்று அந்த அம்மாள்‌ கொஞ்சதூரம்‌ போயிருப்பாள்‌. பரதேசி தன்‌ வாயினுள்‌ விரலைவிட்டுக்‌ கொடகொடவென்று – ஒரு குடம்‌ இருக்கும்‌ – வாந்தி எடுத்தான்‌ ! பரதேசிகளுக்கு மத்தியில்‌ சலசலப்பும்‌ கலகலப்பும்‌ ஏற்பட்டது.

வாந்தியெடுத்த பரதேசி ஒன்றுமே நடக்காததுபோல்‌ தெப்பத்‌துக்குள்‌ இறங்கி வாயைக்‌ கொப்பளித்துவிட்டு அந்தக்‌ கிழவி அம்மாள்‌ காட்டிய வேம்படியைப்‌ பார்த்துப்‌ போனான்‌.

இந்தக்‌ காட்சியை சிவகாமியாய்‌ இருந்த சிறுமி எத்தனையோ பேரிடம்‌ சொல்லி அதிசயப்பட்டுச்‌ சிரித்திருக்கிறாள்‌.

2

இப்போது சிவாமி அச்சிக்கு வயசு அறுயதுக்குக்கிட்டே இருக்கும்‌. தனது மகள்வயிற்றுப்‌ பேரன்‌ பரமுவுக்காக இப்போது நேர்ந்து கொண்டிருக்கிறாள்‌. நோயிலிருந்து அவன்‌ பிழைத்ததே மறுபிழைப்பு. குறிப்பை விரித்துப்‌ பார்த்த சோதிடன்தான்‌ சொன்னான்‌; “மலைக்‌ கோயில்‌ திருவிழாவுக்குப்‌ போயி ஒரு அஞ்சி பரதேசிகளுக்காவது அன்னதானம்‌ கொடுங்க”

ஆச்சியின்‌ இப்போதைய பொருளாதார நிலவரம்‌ சோதிடனுக்கும்‌ தெரியும்‌; உள்ளூர்க்காரன்தானே அவனும்‌! பெருங்கொண்ட குடும்பத்‌தில்‌ பிறந்து வந்த ஆச்சியின்‌ நிலை இப்படி ஆகிவிட்டது இப்போ.

அஞ்சி பேருக்காக அரிசி, பருப்பு, விறகைச்‌ சுமந்துகொண்டு போக முடியாது. ‘முந்திமாதிரி நிலைமை இருந்தா எல்லாரும்‌ சிவாமி அச்சி சிவாமி ஆச்‌சி’ண்ணு சுத்திச்‌ சுத்தி வருவானுக, ‘ஏம்பாடும்‌ இப்படி ஆயிட்டதே முருகய்யா’ என்று மூக்கைச்‌ சிந்தி வீசினாள்‌. நேர்த்திக்‌ கடனை ஓப்புக்கொண்டபோது இருந்ததைவிட இப்பொ ரொம்ப பாரமாகத்‌ தெரிந்தது.

எப்படியோ அரிசி பருப்பைச்‌ சமாளித்துவிட்டாள்‌. இந்த மலைப்‌பிலும்‌ ஆச்சிக்கு ஒரு ‘ரோசனை’ பளிச்சிட்டது. ‘இங்கிருந்தே
சாப்பாட்டை சமைச்சி எடுத்துக்கொண்டு போயிட்டா என்ன?’

ஒரு அஞ்சி சாப்பாட்டைச்‌ சுமந்துகொண்டு போகமுடியாமல்‌ தளர்ந்து போய்விடவில்லை இன்னும்‌. ‘பரமுவுக்கு றக்கை முளைச்‌
சிட்டா ஒரு கவலையும்‌ இல்லெ; பெறவு அவன்‌ பறந்துக்கிடுவான்‌. மலைச்சாமி முருகரோட மனசிலெ இருக்கறது யாருக்குத்‌ தெரியும்‌?’

பங்குனித்‌ திருவிமா மலைக்கோயில்லெ ரொம்ப விசேசம்‌. குருபூசை கொடுக்கிறவர்கள்‌ முந்தியெல்லாம்‌ வண்டியிலெதான்‌ வர்றது; இப்பொ லாரி! லாரி லாரியா வந்து சாமான்கள்‌ இறங்கும்‌. மாட்டு வண்டியெல்லாம்‌ இந்தப்‌ பட்டிகளிலிருந்துதான்‌. சனப்‌பெருக்கம்‌ பணப்பெருக்கம்‌ பக்திப்பெருக்கம்‌ எல்லாமே சாஸ்தியாயிட்டது என்று அவள்‌ சொல்லிக்கொண்டாள்‌.

அவளுக்கு வருசாவருசம்‌ திருவிழாவுக்குக்கூட போக முடிகிறதில்லை. முதல்லெ அஞ்சி கல்‌ தொலைவு நடக்கணும்‌. அதோட தீராத வேலை; தினோமும்‌ காட்டுவேலைக்குப்‌ போனால்தான்‌ கஞ்சி குடிக்கலாம்‌.

3

அன்றைக்கு ஆச்சி வெள்ளன எழுந்து குளிச்சி முழுகி சமையல்‌ முடித்து, பேரப்பின்ளைக்குக்‌ கஞ்சி வச்சிக்‌ கொடுத்து, வேண்டியது சொல்லிவிட்டு, பெரிய பனை நார்க்கடகத்தில்‌ சாப்பாட்டை யெல்லாம்‌ எடுத்து வைத்துக்கொண்டு மலைச்சாமி கோயிலுக்கு புறப்பட்டாள்‌.

இந்தக்‌ கோயிலுக்கு என்று புறப்பட்டுவிட்டால்‌ எங்கிருந்துதான்‌ பலமும்‌ தெம்பும்‌ வருமோ தெரியலை. அவளுக்கு முந்திய நினைவுக ளெல்லாம்‌ வரிசையாய்‌ வந்தன.

நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே தெருவிலும்‌, காடுகளில்‌ வேலைசெய்து கொண்டுருப்பவர்களும்‌ விசாரித்தார்கள்‌ ! தொலைவில்‌ இருந்தவர்கள்கூடக்‌ கேட்டார்கள்‌.

“ஏ அச்சி கோயிலுக்கா…?”

“ஆமோவ்‌…”

கண்களுக்கு மலை தட்டுப்பட்டதுமே “முருகைய்யா” என்று சத்தம்‌ போட்டுச்‌ சொன்னாள்‌.

திருவிழா பார்க்கும்‌ ஜனங்கள்ளாம்‌ வேலைவெட்டி முடிந்து சாய்ந்திரம்தான்‌ புறப்பட்டு வருவார்கள்‌. இப்பொ ஆச்சி தனீயாத்தான்‌ போகணும்‌.

மூணுகல்த்‌ தொலைவு நடந்து சிவாமி ஆச்சி மயில்‌ மேட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டாள்‌. ஊர்வாசிகள்‌ மலைச்சாமி கோயிலுக்குப்‌
போகும்போதும்‌ வரும்போதும்‌ அவர்களுக்கு இந்த மயில்மேடும்‌ ஒரு தாப்பு. சிவாமி சின்னப்பிள்ளையாக இருக்கும்போது இந்த மயில்‌ மேடும்‌ இதைச்‌ சுற்றிலும்‌ ரண்டுகல்‌ சுற்றளவுக்கும்‌ ஒரு ரம்மியமான சிறைக்காடும்‌ இருந்தது. ‘மயில்‌ மேட்டுச்‌ சிறைக்காடு’ என்று பெயர்‌. எங்கே பார்த்தாலும்‌ மயில்‌ இறகுகள்‌ சிதறிக்கிடக்கும்‌. கூட்டம்‌ கூட்டமாய்க்‌ கணக்கிலாத மயில்கள்‌ திரிந்துகொண்டிருக்கும்‌. இந்த சிறைக்காடு பூராவும்‌ மலைச்சாமி கோயில்‌ தேவஸ்தானத்துக்குச்‌ சொந்தமாக இருந்தது.


ஒரு சமயம்‌ இந்தக்‌ கரிசல்க்காட்டில்‌ வந்த “பிண்ணாக்குப்‌ பஞ்சம்‌” அந்த சிறைக்காடு பூராத்தையும்‌ ‘சாப்பிட்டுவிட்டது!’

இந்தச்‌ சிறைக்‌ காட்டில்தான்‌ முருகர்‌, வள்ளி தெய்வானையோடு வந்து உலாவுகிறதாம்‌. அதனால்‌ காய்ந்து உதிர்ந்த ஒரு சுள்ளியைக்கூட தொடாமல்‌ இருந்த இந்த வனத்தில்‌ கிராம மக்கள்‌ பசிக்‌ கொடுமையினால்‌ முதலில்‌ காய்ந்த சுள்ளிகளைமட்டுமே சேகரித்து அதைக்‌ கட்டாக்கட்டி பக்கத்திலுள்ள டவுனில்க்‌ கொண்டுபோய்‌ முக்கால்‌ ரூபாய்க்குப்‌ போட்டுவிட்டு அந்தப்‌ பணத்துக்குப்‌ பிண்ணாக்கை வாங்கிக்கொண்டு வருவார்கள்‌. குடும்பத்தோடு அந்தப்‌ பிண்ணாக்‌கைத்‌ தின்று தண்ணீர்‌ குடித்துவிட்டு படுத்துக்கொள்வார்கள்‌: “அப்பாடி; ஒருநாப்‌ பொமழுதுபோச்சி. முருகர்‌ இண்ணைக்குப்‌ படியெ
அளந்துட்டார்‌. நாளைக்கு எப்படியோ பாப்பம்‌.”

இந்தக்‌ கரிசல்க்காட்டுக்குப்‌ பஞ்சம்‌ வந்தால்‌ ஒரு வருசத்தோடு அது போகாது. இந்த மண்ணின்மேல்‌ அதுக்கு ரொம்பப்‌ பிரியம்‌. மேகங்கள்‌ மட்டும்‌ இந்த மண்ணை மறந்துவிட்டுக்‌ கடந்து போய்க்‌ கொண்டே இருக்கும்‌; அதுகளுக்கு அவ்வளவு வெறுப்பு.

அடுப்பு எரிக்க பருத்திமார்‌ கிடையாது. மழை பெய்தால்‌ பருத்தி விளையும்‌; பருத்திமாரும்‌ எரிக்கக்‌ கிடைக்கும்‌. எத்தனை நாட்களுக்குத்‌ தான்‌ சுள்ளிகள்‌ கிடைத்துக்கொண்டிருக்கும்‌. சிறைக்காட்டில்‌ சுள்ளிகள்‌ தீர்ந்து பச்சை மரங்களை வெட்ட ஆரம்பித்தார்கள்‌ கூலிசனங்கள்‌.

இந்த விறகை வாங்கி எரிக்க முதலில்‌ யோசனையாகத்தானிருந்தது. முருகரோட வனத்திலிருந்து வெட்டிக்கொண்டு வந்ததில்லையா? அதனால்த்தான்‌ யோசனை.


முதலில்‌ பக்கத்து கவர்‌ அணாவட்டி சுப்பா நாயக்கர்தான்‌ துணிந்து வாங்கினார்‌. “நாமா வெட்டினோம்‌? வெட்டினவனைப்‌ போய்ச்‌ சேரட்டும்‌ அந்தப்‌ பாவம்‌” என்றார்‌ அவர்‌. வெட்டிக்‌ கொண்டு வந்த விறகுக்‌ கட்டைகளையெல்லாம்‌ வாங்கி வாங்கி அடுக்கினார்‌. ‘மலைபோல’ லாரி லாரியாகப்‌ பாரம்‌ ஏற்றிப்‌ பக்கத்து நகரங்களுக்குக்‌ கொண்டுபோய்‌ நல்ல லாபத்துக்கு அவைகளை விற்று நோட்டுக்‌ கட்டுகளாகச்‌ சேர்த்து பாங்கில்‌ கொண்டுபோய்‌ போட்டார்‌.

ரொம்பநாள்க்‌ கழித்துத்தான்‌ மற்ற பெருந்தனக்காரர்கள்‌ “அணாவட்டியைப்‌ பின்பற்ற ஆரம்பித்தார்கள்‌; அதுக்குள்‌ சிறைக்காடு
முக்கால்வாசிக்குமேல்‌ தீர்ந்து போய்விட்டது.

மயில்மேட்டுச்‌ சிறைக்காட்டில்‌ இத்தனை நாள்‌ சொகமாய்‌ வாழ்ந்துகொண்டிருந்த ‘முருகரோட மயில்‌’களெல்லாம்‌ போக்கிடம்‌
தெரியாமல்‌ இப்போது தத்தளிக்க ஆரம்பித்தன.

சனங்களும்தான்‌ எத்தனை நாட்களுக்குப்‌ பிண்ணாக்கை மாத்திரம்‌ தின்றுகொண்டிருப்பார்கள்‌. மயில்‌ முட்டையும்‌ நல்ல ருசிதான்‌ என்று அவர்களுக்குத்‌ தெரிய ரொம்ப நாட்கள்‌ ஆகவில்லை.

மயில்‌ முட்டைகள்‌ பூராவும்‌ இவர்களுடைய வயிற்றுக்குள்ளே போய்விட்டதால்‌ மயில்கள்‌ கெலிப்பது நின்று போய்விட்டது.
ரொம்பப்‌ பேர்‌ மயில்க்கறியும்‌ நல்லாத்தான்‌ இருக்கு என்று சொல்ல ஆரம்பித்ததும்‌ மிஞ்சிய சில மயில்கள்‌ தப்பித்தேன்‌, பிழைத்தேன்‌ என்று வேறு காடுகளைப்‌ பார்த்து ஓடிப்‌ போய்விட்டாலும்‌ மயில்மேடு என்கிற பெயர்‌ மட்டும்‌ நிலைத்துவிட்டது.

அணாவட்டி சுப்பாநாயக்கருக்கு ரொம்பக்‌ கோவம்‌; இந்த மயில்‌களையும்‌ மயில்‌ முட்டைகளையும்‌ பொறுக்கித்‌ தின்ற பயல்கள்‌ பேரில்‌, கனத்த முருக பக்தர்‌ அவர்‌. தனது முழங்கால்‌ வீக்கத்தின்மேல்‌ மயில்க்கால்த்‌ தைலத்தை விட்டு அறக்கித்‌ தேய்த்துக்கொண்டிருந்த பண்டிதனிடம்‌, ‘இந்தப்‌ பாமர ஜனங்கள்‌ இப்படி முருகரோட வாகனத்தை அழித்தொழித்து விட்டார்களே. இது என்ன கேடுகாலத்‌ துக்கோ’ என்று அவர்‌ சொல்லிக்‌ கொண்டிருந்தார்‌.

பண்டிதனுக்கும்‌ மனக்குறைதான்‌; மயில்களையெல்லாம்‌ இப்படி அழித்தொழித்துவிட்டால்‌ பிறகு மயில்க்கால்த்‌ தைலம்‌ இறக்குகிறது எப்படி என்று.

இப்போது மயில்மேட்டில்‌ ஒரு கசம்‌ மட்டும்‌ இருக்கிறது; அதன்‌ கரையைச்‌ சுற்றிலும்‌ அத்தி ஆல்‌ இத்தி அரசு என்று மரங்கள்‌ அதன்‌ நீராணியினால்‌ வானளாவி நிற்கின்றன.

மயில்மேட்டுக்‌ கசத்திலுள்ள தண்ணீரைக்‌ குடித்தால்‌ ஒருவேளைப்‌ பசி தாங்கும்‌ என்று சொல்லுவார்கள்‌; அவ்வளவு ருசி.

4

சிவாமி ஆச்சி மயில்மேட்டுக்கு வந்து சேருவதற்குள்‌ ஆள்‌ ‘தவிடு தாங்கிப்‌ போய்விட்டாள்‌. இவ்வளவு அலுப்பும்‌ களைப்பும்‌ எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை; ஒருவேளை இன்றைக்கு விரதம்‌ என்று ஒன்றுமே சாப்பிடாமல்‌ சுமைவேறு சுமந்துகொண்டு வந்ததினால்‌ இப்படி ஆச்சோ?

“முருகையா… எல்லாம்‌ ஒன்‌ கிருபை” என்று சொல்லிக்கொண்டே மரநிழலில்‌ கொஞ்சநேரம்‌ கால்‌ நீட்டி உட்கார்ந்திருந்துவிட்டு, கசத்‌தினுள்‌ இறங்கி தண்ணீர்‌ மொண்டு குடித்துவிட்டு “தேங்காய்ப்பால்‌ மாதரி இருக்கு” என்று சொல்லிக்கொண்டாள்‌.

எட்டி நடந்தாள்‌ சிவாமி ஆச்சி. மலையை நெருங்க நெருங்க திருவிழாவின்‌ களை தெரிந்துகொண்டே வந்தது. எந்தப்‌ பக்கம்‌ திரும்பினாலும்‌ மக்கள்‌ குதூகலமாய்த்‌ திரிந்துகொண்டிருந்தார்கள்‌. மரத்தடிகளிலெல்லாம்‌ வண்டிகள்‌ அவிழ்த்துப்‌ போடப்பட்டு மாடுகள்‌ கழுத்து மணிகள்‌ ஒலிக்க கூளம்‌ தின்றுகொண்டிருந்தன. கிடைத்த இடங்களிலெல்லாம்‌ அடுப்பைக்‌ கூட்டி சமையல்‌ செய்துகொண்டிருந்‌தார்கள்‌. எல்லாம்‌ திருவிழாவுக்கு வருகிற அண்டி பரதேசிகளுக்குப்‌ போட்டு, தாங்களும்‌ உண்டு சந்தோஷப்படத்தான்‌.

குழந்தைகள்‌ குதியாட்டம்‌ போட்டுக்கொண்டிருந்தன. பெண்டுகள்‌ தெப்பத்தில்‌ குளித்துவிட்டு ஈரத்தலையை ஆற்றிக்கொண்டே
சேலையின்‌ ஒரு நுனியை ஏதாவது ஒரு செடியில்‌ கட்டிவிட்டு மறு நுனியை உடம்பில்‌ ஒரு சுற்றுமட்டும்‌ சுற்றிக்கொண்டு நீளமாகச்‌ சேலையைக்‌ காயவிட்டுக்‌ கொண்டுருந்தார்கள்‌.


கோயிலை நெருங்கியதும்‌ சிவாமி ஆச்சியின்‌ கண்களில்‌ ஒரு காட்சி தட்டுப்பட்டது. தலையில்‌ சோற்றுக்‌ கடகத்தைச்‌ சுமந்துகொண்டே நின்று பார்த்தாள்‌. ஒரு பசு மாட்டுக்குப்‌ பூசை நடந்துகொண்டிருந்தது. அப்படி ஒரு அழகு நிறைந்த காராம்‌ பசுவை அவள்‌ இதுவரை பார்த்ததே இல்லை. மாட்டின்மீது பதித்த கண்களை எடுக்க முடியலை! “என்ன அழகு, என்ன அமரிக்கை’ என்று வியந்தாள்‌.

இப்பொவெல்லாம்‌ இந்த மாட்டின்‌ விலை முவ்வாயிரத்துக்குக்‌ குறையாது என்று நினைத்துக்கொண்டு, பக்கத்திலிருந்தவரிடம்‌ “என்ன விலை பெறும்‌’ என்று கேட்டபோது “ஐயாயிரம்‌ கொடுத்தாலும்‌ இப்பொ இப்படி சுத்தமான அசல்‌ காராம்‌ பசு கெடைக்காது” என்றார்‌. பசுமாடு தானத்துக்கு வந்திருக்கு. பசுவைப்‌ பூஜை முடிந்ததும்‌ அய்யருக்கு தானமாகக்‌ கொடுத்துருவாக என்று சொன்னார்கள்‌.

‘அட! தானங்‌ கொடுக்கது நம்ம விநாயகமில்லா!!’ ஆச்சிக்கு ஆச்சரியம்‌ தாளமுடியவில்லை.

விநாயகம்‌ பக்கத்து ஊர்‌; தனக்கு தூரத்து உறவுங்கூட.

கோதானம்‌ முடிந்து விநாயகம்‌ திரும்பும்போது ஆச்சியைப்‌ பார்த்து விட்டான்‌. ஆச்சிக்கு சந்தோஷம்‌. இப்படி ஒரு காராம்‌ பசுவை ஐயருக்குத்‌ தானமாகக்‌ கொடுத்த விநாயகத்துக்குப்‌ புண்ணியம்‌ நிறைய்யக்‌ கிடைக்கும்‌.

“வெநாயகோம்‌” என்று அவனை பாசத்தோடு கூப்பிட்டு விசாரித்தாள்‌. பிறகுதான்‌ தெரிந்தது, விநாயகம்‌ சொல்லிய தகவல்‌
களிருந்து. “என்ன ஆச்சி நீ சுத்த இதுவா இருக்கெ! இம்புட்டு வெலை கொடுத்து இப்பிடி ஒரு காரம்‌ பசுவெ நம்ம சென்மத்திலேயும்‌ வாங்கி தானமாக கொடுக்கமுடியுமா?”

“பெறவு?!”

“அம்பது ரூபாக்‌ கொடுத்தாப்‌ போதும்‌ அய்யருக்கு. அதுலெ பத்து ரூபா தரகுக்குப்‌ போயிரும்‌. அய்யரு வீட்லெ இருந்துதா இதே மாட்டெ தரகனாரு பிடிச்சிட்டு வந்து, பூசெ செஞ்சி – பூசெச்‌ செலவல்லாம்‌ நாமதான்‌ – பூசெ முடிஞ்சதும்‌ பிடிகயித்தெப்‌ பிடிச்சி அய்யருகிட்டெ ஒப்படைச்சிற வேண்டியது. அறுவது ரூபா சில்லரை செலவாகும்‌.”

இந்த ‘தானம்‌’ ஆச்சிக்கு சரி என்று படவில்லை. ஏதோ இதுல தப்பு இருக்கு என்று பட்டாலும்‌ அதைச்‌ சொல்லத்‌ தெரியவில்லை.

விநாயகத்துக்கு ஏதோ அவசரம்‌ போலிருக்கு; ஆச்சியின்‌ அன்ன தான விஷயத்தை அவள்‌ சொல்ல ஆரம்பிப்பதற்குள்‌ கழன்றுகொண்டு, ஓடாத குறையாகப்‌ போய்விட்டான்‌. தான்‌ கோதானம்‌ செய்வதைப்‌ பார்த்தவர்களில்‌ நம்முடைய ஆச்சியும்‌ ஒருத்தி; அவனுக்கு திருப்தியாக இருந்தது.

திருவிழாக்‌ காலமாதலால்‌ கோயில்‌ கூட்டம்‌ அதிகமாக இருந்தது. வசந்த மண்டபத்தில்‌ சுமையை இறக்கி வைத்துவிட்டு தெப்பத்துக்குள்‌ இறங்கி முகம்‌ கைகால்‌ அலம்பிக்கொண்டு, தேவஸ்தான ஆபீஸில்‌ தேங்காய்‌ உடைக்க ஒரு சீட்டும்‌, பரமு பெயரில்‌ அர்ச்சனை செய்ய ஒரு சீட்டும்‌, வாங்கிக்கொண்டு கோயிலுக்குள்‌ போய்‌ வந்தாள்.

பூசை முடிந்தது. கோயில்‌ பட்டர்‌ கிழக்கே பார்த்து நின்று கொண்டார்‌.

திருவிழா சமயத்தில்‌ வந்தால்‌ இப்படித்தான்‌. எதுவுமே சரியா நடக்காது என்று சொல்லிக்கொண்டே வந்தாள்‌. ஆனாலும்‌ முருகரை அலங்காரம்‌ செய்திருந்தது அவளுக்கு ரொம்பப்‌ பிடிச்சிருந்தது. நன்றாக நின்று கண்குளிர சேவிக்க முடியலையே என்கிற ஆதங்கத்‌தோடு வெளியே வந்தாள்‌.

தெரிந்த இடத்தில்‌ வைத்திருந்த கடகத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது அவர்கள்‌ சொன்னார்கள்‌ ‘ஏ, ஆச்சி, வாளையிலை வாங்காமப்‌ போறயே பரதேசிகளுக்கு எதுலெ படைப்பெ?’

மடியைத்‌ தொட்டுப்‌ பார்த்துக்கொண்டாள்‌. ‘ஒரு பூட்டு இலைக்கு துட்டு காங்குமா’ என்று. மலைப்‌ பாறைகளில்‌ கல்த்தச்சர்கள்‌, சோறு வைத்துச்‌ சாப்பிடுவதற்கென்றே நூற்றுக்கணக்கில்‌ அழகாகவும்‌ மழு மமுப்பாகவும்‌ “திருவோட்டுப்‌ பள்ளம்‌” செய்து வைத்திருக்கிறார்கள்‌. அவை கல்த்தச்சர்களின்‌ நேமுங்கள்‌. கொஞ்சம்‌ தண்ணீரை விட்டு சுத்தப்படுத்திவிட்டு அந்தத்‌ திருவோட்டுப்‌ பள்ளத்திலேயே – இலைபோடாமல்‌ – சாதம்போட்டு சாப்பிடலாம்‌, முன்னாடி யெல்லாம்‌ அப்படித்தான்‌ எல்லாருமே சாப்பிடுகிறது. ‘இப்பொ சனங்க ரொம்பப்‌ படிச்சுப்‌ போனாக; நாகரீகம்‌ பெருத்திட்டதில்லா’

கடைக்காரனை நாடியைத்‌ தாங்கி நல்ல வார்த்தைகள்‌ சொல்லி, இருக்கிற துட்டைக்‌ கொடுத்துவிட்டு ஒரு பூட்டு இலைகளை வாங்கிக்‌ கடகத்துக்குள்ளே வைத்துக்கொண்டு புறப்பட்டாள்‌. வரும்போது திரும்பவும்‌ அதே இடத்தில்‌ கூட்டம்‌ கூடி நின்று பார்த்துக கொண்டிருந்தது. ஆச்சி திரும்பிப்‌ பார்த்தாள்‌. யாரோ ஐயருக்கு அதே காராம்‌ பசுவை அதேபோல தானம்‌ செய்துகொண்டிருந்தார்கள்‌.

5

போகும்போதே ஆச்சி குருபூசைக்கு வந்திருக்கும்‌ கூட்டத்தைப்‌ பார்த்துக்கொண்டே போனாள்‌. ”முந்தி வந்ததுகளைவிட இப்பொக்‌ கூட்டம்‌ ரெம்பத்தான்‌. முந்து இந்தப்‌ பாறைகளைவிட்டுக்‌ கூட்டம்‌ இறங்காதே, இப்போ என்னடாண்ணா மலையைச்சுத்தி தரை பூராவும்‌ நாலா பக்கமுமில்லே குரூபூசைக்‌ கூட்டம்‌ பெருகீட்டது!’

ஒரு ஓரமாக பாரத்தை இறக்கி வைத்தாள்‌. அங்கேதான்‌ காவி உடுத்திய பரதேசிக்‌ கூட்டம்‌ எக்கச்சக்கமா இருந்தது.

ஒரு ஒழுங்கு இல்லாமல்‌ கண்டமேனிக்கு கண்ட கண்ட இடத்தில்‌ சாப்பாடு நடந்துகொண்டிருந்தது.

சாப்பிடுகிறவர்களுக்கும்‌ சந்தோஷம்‌; சாப்பாடு படைக்கிறவர்‌களுக்கும்‌ சந்தோஷம்‌. ஆச்சியைப்‌ பார்த்து ஒரு இளம்‌ பண்டாரம்‌
மலர்ந்த முகத்துடன்‌ விரைந்து வந்தான்‌. ஆச்சிக்கு ஒரு வினாடி ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. “வா முருகய்யா; வந்துட்டாயே” என்று தன்னை யறியாமல்‌ சொன்னாள்‌.

“பாட்டி, கடகத்திலே என்ன கொண்டு வந்திருக்கே?” என்று கேட்டான்‌ அந்தப்‌ பண்டாரமானவன்‌.

“ஒனக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்‌ முருகய்யா”

இலையையும்‌ போர்த்தியிருந்த துணியையும்‌ அவன்‌ விலக்கிப்‌ பார்த்துவிட்டு “ஊருலெயிருந்தே சமைச்சிக்கொண்டு வந்துட்டெ
போலிருக்கே; நல்ல யோசனைதான்‌!” என்று பாராட்டிச்‌ சொல்லி விட்டு “எத்தனை பேருக்கு?” என்று கேட்டான்‌.

ஒரு கணம்‌ அவளுக்குத்‌ தொண்டையை அடைத்துக்கொண்டது.

‘முருகா, இந்த ஏழைக்‌ கிழவியால்‌ அஞ்சிபேருக்குத்தான்‌ சாப்பாடு போடமுடியும்‌’ என்று சொல்லுவதற்கு சங்கடப்பட்டாள்‌.

“சரி பாட்டி, இப்பொ ஒரு சாப்பாட்டுக்கு அஞ்சி ரூபா வாங்குரோம்‌; ஐ அஞ்சு இருபத்தி அஞ்சி ரூபா உன்னிடம்‌ இருந்தாச்‌
சொல்லு”


பாட்டி சிரித்தாள்‌, இந்த முருகருக்கே ஏழைக்‌ கிழவிகளோட வந்து விளையாடுகிறதுலே ஒரு பிரியம்‌ போலிருக்கு என்று நினைத்துக்‌ கொண்டே இலைகளை எடுத்துப்‌ போட்டு தண்ணீர்‌ தெளித்து தன்‌ கிழிந்த அழுக்கு முந்தானையால்த்‌ துடைத்துவிட்டு, சாதம்‌ பரிமாறினாள்‌. அப்போது வேறு சில துணைப்‌ பண்டாரங்களும்‌ வந்தார்கள்‌. பரிமாறி முடித்துவிட்டு “சாமீ, என்ன குத்தம்‌ இருந்தாலும்‌ நீங்கதான்‌ ஏத்துக்கிடணும்‌” என்று சொல்லி அவர்களை நெடுஞ்சாண்‌ கிடையாக விழுந்து வணங்கினாள்‌. எழுந்தாள்‌!

பண்டாரங்கள்‌ ஒருவர்‌ முகத்தைப்‌ ஒருவர்‌ பார்த்துக்கொண்டார்‌கள்‌; ‘பொல்லாத கிழவியாய்‌ இருப்பாள்‌ போலிருக்கே’ என்பது
போலிருந்தது அந்தப்‌ பார்வைகள்‌. அதில்‌ தலைமைக்‌ கொத்தன்‌ போலிருந்த பண்டாரம்‌ ஆச்சியைப்‌ பார்த்து அதட்டிய குரலில்‌ “அஞ்சி அஞ்சி ரூபா கொடுத்தா சாப்பிடுறோம்‌; இல்லைன்னா சாப்பாட்டை எடுத்துக்கிட்டு போயிச்சேரு” என்றான்‌.

ஆச்சிக்கு இப்போதுதான்‌ விளங்கியது; முருகர்‌ தன்னோடு வந்து விளையாடலை என்று. “இருபத்தஞ்சி ரூபாய்க்கு நா எங்கே
போவேன்‌-” திரும்பவும்‌ அவர்கள்‌ காலில்‌ விழுந்து கும்பிட்டாள்‌. தன்‌ பாட்டையெல்லாம்‌ எடுத்துச்‌ சொன்னாள்‌. அமுதாள்‌; தொழுதாள்‌. கெஞ்சினாள்‌. ஒன்றுமே நடக்கலை.

முருகா, இது என்ன சோதனை” என்று கண்ணீர்விட்டுக்‌ கரைந்தாள்‌. தான்‌ இருப்பது முருகரோட சன்னிதி; இது அவன்‌ மலை; அவன்‌ இடம்‌; நான்‌ அவன்‌ குழந்தை. நான்‌ எதுக்காக அழனும்‌’ என்று அவள்‌ மனசுக்குள்‌ திடீரென்று ஒரு எண்ணம்‌ வந்து
தோன்றியது. சரி; அவனே இதுக்கு ஒரு வழி செய்வான்‌ என்று பாரத்தையெல்லாம்‌ அவன்பேரில்‌ போட்டுவிட்டுக்‌ காத்துக்‌
கொண்டிருந்தாள்‌.


திடீரென்று பனங்காட்டில்‌ மழை பெய்யும்‌ ஆரவாரம்போல மனிதச்‌ சலசலப்பு அங்கே தோன்றியது. லாரி லாரியாக உணவு
வகைகள்‌ வந்து இறங்கின. எல்லாப்‌ பண்டாரப்‌ பரதேசிகளும்‌ ஒரு ஒழுங்குக்குக்‌ கட்டுப்பட்டவர்கள்போல வரிசை வரிசையாக
உட்கார்ந்தார்கள்‌. கொஞ்சநேரத்தில்‌ அங்கே ஒரு கல்யாண வீட்டுப்‌ பந்தியின்‌ கலகலப்பு ஏற்பட்டுவிட்டது. பசும்மஞ்சள்‌ நிறத்தில்‌ பெரிய்ய பெரிய தளிர்‌ வாழை இலைகளையும்‌, தான்‌ கொண்டுவந்து போட்டிருக்கும்‌ கல்வாழை இலைபோலுள்ள சிறிய இலைகளையும்‌ ஆச்சி பார்த்தாள்‌. வகை வகையான கறிவகைகள்‌, சன்ன அரிசிச்‌ சாதம்‌; இங்கேயுள்ளதுபோல சிகப்புச்சாரல்‌ விழுந்த பரும்‌ அரிசி இல்லை. நெய்‌ முதல்க்கொண்டு எல்லாம்‌ படைத்து முடிந்தது. அனைவரும்‌ சாப்பிடாமல்‌ பொம்மைபோல அசையாமல்‌ உட்கார்ந்‌ இருந்தார்கள்‌. படைக்கப்பட்ட மீதி இலைகளும்‌ நிறைய்ய இருந்தது. வேடிக்கை பார்க்க வந்த ஜனங்களையும்‌ அவைகளில்‌ உட்காரும்படி வற்புறுத்தினார்கள்‌. சிலர்‌ உட்கார்ந்தார்கள்‌; சிலர்‌ உட்காரவில்லை.

இந்தச்‌ சமயத்தில்‌ காரிலிருந்து ஒருவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வந்தார்கள்‌. அவர்‌ மெலிந்து வயோதிகத்தினால்‌ தளர்ந்துபோயிருந்தாலும்‌ சிவாமி ஆச்சிக்கு அவரை அடையாளம்‌ தெரிந்தது. பக்கத்து களர்‌ அணாவட்டி சுப்பா நாயக்கர்தான்‌ அவர்‌.

ஒரு மடக்கு நாற்காலியைக்‌ கொண்டுவந்து, விரித்து அதை அசையாமல்‌ சரிசெய்து அதில்‌ அவரை உட்கார வைத்தார்கள்‌.
உட்கார்ந்ததும்‌ அவர்‌ “தெய்வானை” என்று கூப்பிட்டார்‌. மஞ்சள்‌ மெழுகில்‌ செய்த அழகு பொம்மைபோல தளதள என்று ஒரு பெண்‌ அவர்‌ முன்னால்‌ வந்து நின்றாள்‌. அவள்‌ உடுத்தியிருப்பது பட்டு இல்லை என்று மட்டும்‌ ஆச்சிக்குத்‌ தோன்றியது. என்ன துணி என்றே தெரியவில்லை. இப்படியும்‌ ஒரு நிறமும்‌ துணியும்‌ இருக்குமா என்பதுபோல்‌ அது அங்குள்ள பெண்கள்‌ கூட்டத்தின்‌ அனைவரின்‌ கவனத்தையும்‌ கவர்ந்தது.

அணாவட்டி சுப்பாநாயக்கர்‌, அவளிடம்‌ ஒரு கட்டு புத்தம்‌ புதிய ஐந்து நபாய்‌ நோட்டுக்கட்டை தனது மடியிலிருந்து எடுத்துக்‌
கொடுத்தார்‌. அந்தப்‌ பளபளப்பான பிஞ்சு விரல்களுக்கும்‌ அந்தப்‌ புதிய நோட்டுத்‌ தாள்களுக்கும்‌ நிறம்‌ சேர்வை பொருத்தமாக இருந்தது.

அவள்‌ காதிதம்‌ பிரிக்கப்பட்ட அப்பளக்கட்டிலிருந்து ஒவ்வொரு பச்சை – அப்பளத்தை எடுப்பதுபோல எடுத்து ஒவ்வொரு இலையின்‌ அடியிலும்‌ ஒரு ஐந்து ரூபா நோட்டை பாதி வெளியே தெரியும்படி சொருகினாள்‌.

“நம்பர்‌ பாத்துக்கோ” என்றார்‌ அணாவட்டி. இதன்‌ அர்த்தம்‌ அங்கு உள்ள யாருக்கும்‌ தெரியக்‌ காரணம்‌ இல்லை; பேத்திக்கும்‌
தாத்தாவுக்கும்தான்‌ தெரியும்‌. ‘ரூபாய்‌ நோட்டிலுள்ள வரிசை நம்பரை கவனித்துக்கொண்டே எடு; இல்லையென்றால்‌ நோட்டோடு நோட்டாக இரண்டு நோட்டுகள்‌ ஒட்டிக்கொண்டு வந்துவிடப்‌ போகிறது’ என்று அர்த்தம்‌ அதுக்கு. நோட்டுக்‌ கட்டுகள்‌ தீரத்தீர புதுக்‌ கட்டுகள்‌ வந்துகொண்டேயிருந்தன.

படைக்கப்பட்ட எல்லா இலைகளுக்குமே ரூபாய்‌ நோட்டு வைத்தாயிற்று. பார்த்துக்கொண்டு நின்றவர்களையெல்லாம்‌ இலை
யில்‌ உட்காரும்படி அந்தக்‌ குடும்பத்தினர்‌ மன்றாடினார்கள்‌.

பட்டுச்சட்டை பட்டுப்பாவாடை அணிந்த ஒரு எட்டு வயசுப்‌ பெண்‌ குழந்தை சிவாமி ஆச்‌சியின்‌கிட்டே வந்து அவன்‌ கையைப்‌
பிடித்து “பாட்டி வா; எலையிலெ உக்காரு” என்று அழைத்தாள்‌.

ஆச்சியால்‌ ஒன்றும்‌ சொல்ல முடியவில்லை. அந்தக்‌ குழந்தையின்‌ சிவந்த நாடியைத்‌ தொட்டு விரல்களால்‌ உருவி அப்படித்‌ தடவி உருவிய தனது விரல்‌ நுனிகளை பொக்கை வாய்‌ உதடுகளில்‌ ஒற்றி முத்தமிட்டுக்கொண்டு, அந்தப்‌ பெண்குழந்தையைப்‌ பக்குவமாகத்‌ திருப்பி, வந்த இடத்துக்கே அனுப்பினாள்‌.

முருகன்பேரில்‌ உரத்த கோஷம்‌ போட்டுவிட்டு கூட்டம்‌ சாப்பிட ஆரம்பித்தது. ஆச்சிக்கு ஏது செய்ய என்று தெரியவில்லை.

யாருமே வந்து உட்காராத தனது இலைகளில்‌ கடகத்திலுள்ள பாக்கிச்‌ சோற்றையும்‌ ஒழுங்காக எடுத்து வைத்துவிட்டு கடகத்தையும்‌ மற்ற ஏனங்களையும்‌ எடுத்துக்கொண்டு வெறும்‌ வயிற்றுடன்‌ அங்கிருந்து புறப்பட்டாள்‌.


ஓம்‌ சக்தி

மார்ச்‌ 1983